பீகாரில் செல்போன் நிறுவன அதிகாரிகள் போல நடித்த கும்பல் செல்போன் டவரையே திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக நாடு முழுவதும் செல்போன் டவர் திருட்டு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பீகாரின் பாட்னாவில் உள்ள யார்பூர் ராஜ்புதானா என்ற பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் ஒன்று சுமார் 16 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது.
சமீபத்தில் செல்போன் நிறுவன அதிகாரிகள் என டவர் அமைக்கப்பட்ட நில உரிமையாளரை சந்தித்த சிலர் செல்போன் டவர் ஒப்பந்த காலம் முடிந்து விட்டதாகவும், அதனால் செல்போன் டவரை அவரது நிலத்திலிருந்து அகற்றுவதாகவும் கூறியுள்ளனர்.
அதை அவரும் நம்பிய நிலையில் 2 நாட்களில் மொத்தமாக 25 பேர் சேர்ந்து செல்போன் டவரை பிரித்து ட்ரக்கில் ஏற்றி திருடி சென்றுள்ளனர். சமீபத்தில் செல்போன் டவரை ஆய்வு செய்வதற்காக உண்மையான அதிகாரிகள் வந்தபோதே இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த டவரின் மதிப்பு ரூ.19 லட்சம் என கூறப்படுகிறது, இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.