ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை நடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் வேலையும் இல்லாமல் அத்தியாவ்சிய பொருட்களுக்கு பாடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதனால் செல்லும் வழியிலேயே பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்தது.
தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சம்பந்தபட்ட மாநில அரசுகள் ஈடுபட்டு வெளிமாநில தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனாலும் பலர் கால்நடையாகவே சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அப்படி சென்றபோது தண்டவாளத்தில் படுத்துறங்கியதால் சரக்கு ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் சாலைகளிலும், தண்டவாளங்களிலும் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.