காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குச்சாவடி வாரியாக பெற்ற வாக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு, காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். ஆனால் ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராயும் பணியில் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குச்சாவடி வாரியாக பெற்ற வாக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு, அக்கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வேட்பாளர்களும் தாங்கள் பெற்ற வாக்குகளை, வாக்குச்சாவடி வாரியாக அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 20-ல் விவரங்களை பூர்த்தி செய்து ஜூன் 7 ஆம் தேதி இந்த விவரங்கள் வந்து சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.