பிரதமர் மோடியின் ஆட்சி, ஒரு துக்ளக் ஆட்சி என கர்நாடகா காங்கிரஸ் கட்சி தனது ஆக்ரோஷத்தை தனது டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சி, கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் பின்னால் பாஜக-வின் சதி இருப்பதாக பல அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனை குறித்து கர்நாடகா காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அந்த டிவிட்டர் பதிவில், முகமது பின் துக்ளக்கை போல் ஆட்சி செய்துவரும் பிரதமர் மோடி, நன்னெறி, அறநெறி இல்லாத அரசியல்வாதி என்றும், அவர் அரசியல் சாசனத்தையும். ஜனநாயகத்தையும், ஒதுக்கிவிட்டு, ஆப்ரேஷன் தாமரை என்ற பெயரில் 10 மாநிலங்களில் எதிர்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்கும் பணியை மோடி அரசு செய்துவருகிறது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கங்கிரஸின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், கூட்டணி அரசின் துக்ளக் ஆட்சியால் வெறுப்படைந்த மக்கள், நாடாளுமன்ற தேர்தலில், கங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளை தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற வைத்தது எனவும், இப்படிப்பட்ட தவறான ஆட்சியால், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததை, பாஜக மீது குற்றம் சாட்டுவது மிகவும் தவறான ஒன்று எனவும் கூறியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பலர், பாஜக-வில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.