டெல்லியில் காரில் சிக்கி உயிரிழந்த அஞ்சலியின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு அன்று அதிகாலை டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற அஞ்சலி என்ற பெண் கார் மோதியதில் விபத்திற்குள்ளானார். காரின் கீழ் சிக்கிய அந்த பெண்ணை 12 கி.மீ தூரத்திற்கு கார் இழுத்து சென்றதால் சாலையில் தேய்ந்து பரிதாபமாக அந்த பெண் உயிரிழந்தார்.
அவரது ஆடைகள் கிழிந்து நிர்வாணமான நிலையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக சந்தேகிப்பதாக அவரது தாய் தெரிவித்திருந்தார். இதனால் அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதன் 8 பக்க அறிக்கையை டெல்லி காவல்துறைக்கு மருத்துவ குழு அனுப்பியுள்ளது.
சுமார் 12 கி.மீ தூரம் அவர் சாலையில் தேய்ந்தபடி இழுத்து செல்லப்பட்டதால் அவரது தலை, முதுகு பகுதிகளில் பலத்த காயம் உண்டாகியுள்ளது. நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டதால் அவரது மண்டையோடு தேய்ந்து மூளையின் உட்புற பாகங்கள் பல மாயமாகியுள்ளன. முதுகின் பின்புற விலா எலும்புகள், மார்பு விலா எழும்புகள் அனைத்தும் தேய்ந்துள்ளது என்று மருத்துவக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் தலை, முதுகுத்தண்டு, இடதுதொடை மற்றும் இரு கை மற்றும் கால்களிலும் ஏற்பட்ட காயங்களின் விளைவாக ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டதால் சேறு, தூசுகள் காயங்கள் வழியாக உடலில் படிந்திருப்பதாகவும், ஆனால் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.