அரசின் தடையை மீறி நேற்று டெல்லியில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர்.
டெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் மிக மோசமான அளவு காற்று மாசு எட்டியிருக்கிறது. காற்று மாசை காரணம் காட்டி டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அரசின் தடையை மீறி நேற்று டெல்லியில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டெல்லி நகரத்தில் காற்றின் தரம் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், டெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.