இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆய்வின்போது கிடைத்த டைனோசர் முட்டைகள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் மனித இனம் தோன்றுவதற்கு கோடான கோடி ஆண்டுகள் முன்னதாக உலகில் வாழ்ந்து வந்தவை டைனோசர்கள். உருவ அளவில் பெரியதாக இருக்கும் டைனோசர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், டைனோசர்கள் பற்றிய ஹாலிவுட் படங்களும் வெளியாகி ஹிட் அடித்து வருகின்றன.
இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், சான்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள டோனோசார் பூங்காவில் டெல்லி பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை டைனோசர் முட்டைகளை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த டைனோசர் முட்டைகள் டைட்டானோசாரஸ் என்ற சாகப்பட்சினி டைனோசரால் இடப்பட்டவை என தெரிய வந்துள்ளது. இந்த முட்டைகள் வரிசையாக அடுக்கி இல்லாமல் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய விதத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகள் தற்போது இந்த வகையில் முட்டையிடுகின்றன. ஆனால் ஊர்வன அப்படி செய்வதில்லை.
டைனோசர்கள் பண்டைய கால பறவைகளா அல்லது ஊர்வனவா என்ற கேள்வி இருந்து வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு டைனோசர்கள் பற்றிய மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவும் என கூறப்படுகிறது.