பிரபல திரையிசை பாடகர் கே.கே உயிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபலமான திரையிசை பாடகராக இருந்து வந்தவர் கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கே.கே சிறுவயதிலேயே பெற்றோருடன் மேற்கு வங்கத்தில் குடியேறினார்.
பல ஆயிரம் விளம்பரங்களுக்கு பாடல்கள் பாடிய கே.கே, பின்னர் திரை பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கே.கே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மாநில அரசின் மரியாதை அளிக்கப்படும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அதேசமயம் கே.கேவின் இந்த மரணத்தை போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கே.கே பங்கேற்ற இசை நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில் 7 ஆயிரம் பேர் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அதிகளவிலான கூட்டத்தை கட்டுப்படுத்த தீயணைப்பான்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதனால் அரங்கில் வெப்பநிலை அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அரங்கில் ஏ.சியும் சரியாக செயல்பாடததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் கே.கேவின் தலை மற்றும் சில பகுதிகளில் சிறிய அளவு காயங்கள் இருந்ததாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.