நடிகர் ராம் சரணின் மனைவி மற்றும் அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவருமான உபாசனா காமினேனி கொனிடேலா, ஐஐடி மாணவர்களிடம், பெண்கள் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த 'கரு முட்டைகளை உறைய வைக்கலாம்' என்று ஆலோசனை வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெண்களுக்கு மிகப்பெரிய 'காப்பீடு' என்றும், நிதி சுதந்திரத்துடன் தாமாகவே திருமண முடிவெடுக்க உதவும் என்றும் அவர் 'X' தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த ஆலோசனைக்கு மருத்துவர்கள் மற்றும் தொழில்முனைவோர் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. "கருத்திறன் 35 வயதுக்கு பிறகு குறையும் என்றும், லட்சக்கணக்கில் செலவாகும் இந்த உறைய வைக்கும் முறை "உத்தரவாதம் அளிக்காத ஒரு சூதாட்டமே" என்றும் மகப்பேறு மருத்துவர் ராஜேஷ் பாரிக் விமர்சித்தார்.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் இருபதுகளிலேயே திருமணம் செய்து குழந்தைகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். உபாசனாவின் ஆலோசனையை பணம் உள்ளவர்களுக்கானது என்று விமர்சித்த பலர், அவர் அப்போலோ ஐவிஎஃப் வணிகத்தை விற்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினர்.