பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் அமைப்பை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தாங்கள் தயார் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாவது முறையாக மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக அரசு ஒரே நாடு ஒரே ரேசன் உள்ளிட்ட பல தேசியளாவிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக ஒரே நாடு ஒரே தேர்தல் அம்சத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
வெவ்வேறு காலகட்டங்களில் மாநில, மத்திய தேர்தல்கள் நடப்பதால் நாட்டு வளர்ச்சி திட்டப் பணிகள் பாதிப்பதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நலப்பணி திட்டங்கள் பாதிக்காமல் நடக்கும் என்பதோடு, தேர்தல் ஆணையத்திற்கும் பணம் மற்றும் நேர விரயம் குறையும் என்று கூறப்படுகிறது.
பிரதமரின் இந்த பரிந்துரை குறித்து பேசியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தயாராகவே உள்ளது. இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட சீர்திருத்தங்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இத்திட்டத்திற்கு தயாராக உள்ளது” என அவர் தனியார் செய்தி சேனல் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.