பிரபல நடிகை ஒருவர் பாஜக பிரமுகர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், அந்த பிரமுகர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் புனித் தியாகி என்பவர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றம் சாட்டி, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மும்பையைச் சேர்ந்த அந்த நடிகை, தன்னை நீண்ட காலமாக பாஜக தலைவர் புனித் தியாகி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
"எனது கணவரை நான் பிரிந்த பிறகு, என் மகனுடன் மும்பையில் தனியாக வசித்து வந்தேன்," என்றும் பாஜக தலைவர் புனித் தியாகி, "என்னுடைய மகனுக்கு அடிக்கடி பரிசுகளை வழங்குவதன் மூலம் என்னுடன் நட்பை வளர்த்துக் கொண்டார்" என்றும், அந்த நட்பு மூலம் "எனக்கு நல்ல ஆதரவு கிடைத்ததாக நினைத்தேன்" என்றும் தெரிவித்தார்.
ஆனால் சில மாதங்களிலேயே அவர் தன்னை துன்புறுத்தத் தொடங்கிவிட்டதாகவும், இது குறித்து பிரதமர், உத்தரபிரதேசம் முதல்வர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த புனித் தியாகி, தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.