மைசூரு வனப்பகுதியில் தசரா யானை கோபாலசாமிக்கும், காட்டு யானைக்கும் நடந்த சண்டையில் கோபாலசாமி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் அம்பாரி சுமக்கும் யானைகளில் பிரபலமானது கோபாலசாமி யானை. 58 வயதான கோபாலசாமி யானை மைசூரு மாவட்டம் வீரனஒசஹள்ளி கிராமத்தில் உள்ள யானைகள் பயிற்சி முகாமில் பரமாரிக்கப்பட்டு வருகிறது.
அங்கு மேலும் பல யானைகளும் பராமரிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகள் உலாவுவதற்காக அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்படுவது வழக்கம். அவ்வாறாக கோபாலசாமி மற்றும் இதர யானைகள் காட்டுப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்தபோது ஒரு காட்டுயானை எதிர்ப்பட்டுள்ளது.
அந்த காட்டு யானைக்கும், கோபாலசாமி யானைக்கும் சண்டை மூண்டிருக்கிறது. காட்டு யானையின் தாக்குதலால் நிலை குலைந்த கோபாலசாமி யானை கீழே சரிந்தது. காட்டுயானை சென்ற பின் வன அதிகாரிகள், பயிற்சி முகாமினர் கோபாலசாமி யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபாலசாமி பரிதாபமாக பலியாகியுள்ளது. அதன்பின்னர் கோபாலசாமி யானையை நல்ல முறையில் அவர்கள் அடக்கம் செய்துள்ளனர்.