சபரிமலையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக பக்தர்கள் பல பகுதிகளில் இருந்தும் வருகை தரும் நிலையில் கேரள அமைச்சர் புதிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சபரிமலையில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை வழிபட வருவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடு இருந்ததால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால் பல பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஐயப்ப தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். பலர் ஓய்வின்றி நிலக்கல் வந்தடைந்த உடனே பாதயாத்திரையை தொடங்குவதால் சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் நலன் கருதியும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களில் இருந்து நீண்ட தூர பயணமாக பக்தர்கள் சபரிமலை வருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் உடனடியாக மலை ஏற்றத்தில் ஈடுபட்டால் யாத்திரை சிரமமானதாக இருக்கும்.
இதை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்தி விட்டு சில மணி நேரங்கள் இளைப்பாறிய பிறகு நடைபயணத்தை மேற்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.