விடைத்தாள் கவனக்குறைவாக திருத்தும் ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் இதுவரை 4488 ஆசிரியர்களுக்கு 64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் குஜராத் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கணித பாட விடைத்தாள் திருத்தலின் போது, ஆசிரியர்கள் கவனக்குறைவு காரணமாக 30 மதிப்பெண்கள் தவறாக விடுபட்டதாகவும், அதனால் அந்த மாணவர் பொது தேர்வில் தோல்வியடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 மதிப்பெண்கள் ஒரு மாணவருக்கு தவறுதலாக விடுபட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும், எனவே அலட்சியப் போக்குடன் திருத்தம் செய்த ஆசிரியர்களுக்கு தண்டனையாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட 4488 ஆசிரியர்களுக்கு இதுவரை 64 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தலின் போது தவறுதலாக விடப்படும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.