எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை உயர்நீதிமன்றம் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற கூடாது என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள் அவர்கள் மீதான குற்ற வழக்குகளை அரசியல் கட்சிகள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஆளும் கட்சிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ரத்து செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தங்களது வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற பின்னணியை தெரிவிக்காத அரசியல் கட்சிகளின் சின்னம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.