ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா சுட்டு தள்ளியது. இதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை மையங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, பாகிஸ்தானும் ஜம்மு-காஷ்மீர் சில பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த பதிலடி சம்பவங்களுக்கு பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒருமித்த முடிவை சனிக்கிழமை இரவு எடுத்துள்ளன.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பினரும் தங்கள் ராணுவ இயக்குநர்களின் வழியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், எல்லையில் நிலவும் அமைதி சூழலை கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதுகாப்புத் துறைச் செயலாளர், மூன்றுபடைகளின் தலைமை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எல்லையில் அமைதியான சூழல் உருவாகும் நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.