இந்தியாவில் 130 நாளில் 20 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,73,69,093 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 3,847 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உயர்ந்துள்ளது. 24,19,907 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் 130 நாளில் 20 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதுவரை 4.2 கோடி பேருக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும், 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் இந்த அளவை எட்ட அமெரிக்கா 168 நாட்களை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.