லடாக்கில் சீன ராணுவத்துடனான மோதலுக்கு பிறகு இந்தியர்களிடையே சீன பொருட்கள் தவிர்ப்பு எண்ணம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
லடாக் எல்லையில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த திடீர் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இந்திய வீரர்களை தாக்கியதற்காக பலரும் சீனாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சீனாவுக்கு எதிராக போர் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை விடவும் முன்னோக்கி சீன பொருட்களை தடை செய்து எதிர்ப்பை காட்ட பலர் முனைந்துள்ளனர்.
இந்நிலையில் நெட்டிசன்கள் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என குரல் எழுப்பி வருகின்றனர். மத்திய அரசு பி.எஸ்.என்.எல்-ஐ சீன தொழில்நுட்ப பொருட்களை பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபயோகப்படுத்துவதை தவிர்க்க கூறியுள்ளது. இதுதவிர அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு 500 சீன பொருட்களை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சீன பொருட்களை மட்டுமல்ல சீன உணவுகளையும் மக்கள் தவிர்க்க வேண்டுமென ராஜ்யசபா எம்.பி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர் சீன பொருட்களை மக்கள் தவிர்ப்பது போல கடைகளில் விற்கும் சீன திண்பண்டங்கள், ரெஸ்டாரண்டுகளில் சீன உணவு வகைகளை விற்பது உள்ளிட்டவற்றிற்கும் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.