இலங்கை கடற்பரப்பிலுள்ள எரிபொருள் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வுகளுக்கான கலந்துரையாடல்களை நடத்த இந்தியா முன்வந்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தனியார் துறையினருடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய திட்டத்தை, அமெரிக்காவில் மார்ச் மாதம் நடைபெறும் எரிபொருள் உச்சி மாநாட்டில் தான் முன்வைத்து, தனியார் துறையையும் இதனுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் வளைகுடாவிலுள்ள எம் - 02 என்ற பிரிவை ஏலத்தில் விடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த ஏலம் நிறைவடைந்து, நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், அன்று முதல் 9 தொடக்கம் 12 மாதங்களுக்குள் அகழ்வு பணிகளை ஆரம்பிக்க முடியும் என உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இலங்கையை சூழ முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஆய்வு நடவடிக்கைகளிலும், இலங்கை கடற்பரப்பில் எரிபொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மன்னார் வளைகுடா, காவிரி வளைகுடா மற்றும் இலங்கை வளைகுடா என மூன்றாக பிரித்துள்ளதுடன், இந்த அனைத்து வளைகுடாக்களிலும் எரிபொருள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து பகுதிகளும் 873 பிரிவுகளாக பிரித்து இந்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மன்னார் வளைகுடாவில் மாத்திரம் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் பிரகாரம், 2 பில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் மற்றும் 9 ரில்லியன் கன அடி இயற்கை வாயு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கான ஒழுங்குப்படுத்தல்களை மேற்கொள்ள இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.