கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி கடந்த சில மாதங்களாக ஆட்சியை தக்க வைத்து கொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அவருடைய ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்தது.
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட பாஜக செய்த முயற்சியினால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்று கொள்ளதால் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய முயன்றதாகவும் அந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த தாக்குதலை காங்கிரஸ் கட்சியினர் ஒன்று கூடி சட்டப்பேரவை வளாகத்திலேயே நடத்தியதுதான் இந்த பெரும் பரபரப்புக்கு காரணம். தாக்குதலுக்கு உள்ளான அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதாகர் என்றும், கட்சி நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்காமல் எம்எல்ஏ சுதாகர் பிடிவாதமாக ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது