தலைநகர் டெல்லியில் மாசு அதிகரித்து வரும் நிலையில் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே எழுந்து வரும் நிலையில் பெங்களூரை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கர்நாட அமைச்சர் தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தேஷ்பாண்டே தனது கடிதத்தில் மேலும் கூறியதாவது: "இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் உடனடியான தேவை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பெங்களூர் நகரம் இந்த தேவையை பூர்த்தி செய்யும் சிறந்த நகராக விளங்குகிறது. இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டை ஒரே இடத்திலிருந்து நிர்வகிப்பது அதிலும் வடகோடியில் இருந்து நிர்வகிப்பது கடினம். எனவே தென்னிந்தியர்களின் வசதியை முன்னிட்டு பெங்களூரை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் தென் பகுதியில், இயற்கை பேரிடர்கள் மற்றும் அசாதாண வானிலை அளிக்கும் சவால்களில் இருந்து விலகியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் வசிக்கும் மக்கள் கொண்ட பெங்களூர், பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை முறை, தொழில்துறை முன்னேற்றம், நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் முக்கிய தலமாக விளங்குகிறது. இவ்வாறு அமைச்சர் தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.