கர்நாடகாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் இளைஞர்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திருமண வரன் கிடைப்பது குதிரை கொம்பாகி வருகிறது. பல மாநிலங்களில் இளைஞர்கள் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளங்களில் பதிவு செய்து காத்திருப்பது தொடர் கதையாகி வருகிறது. பலர் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. கர்நாடகாவிலும் இளைஞர்கள் பலர் 30 வயதை எட்டிய போதிலும் திருமணம் நடக்காத நிலையில் உள்ளனர். சமீபத்தில் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாலிபர்கள் ஜாதகத்துடன் பெண் கேட்டு குவிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த நிகழ்ச்சியில் ஜாதகம் அளிக்க 800 பெண்கள் மட்டுமே வந்திருந்தனர். இதன் மூலமே அங்கு திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை குறித்து அறிய முடிகிறது. இதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கோலாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் இளைஞர் ஒருவர் தனக்கு பெண் கிடைக்கவில்லை என்றும், திருமணம் செய்து வைக்குமாறும் மனு அளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக இளைஞர்களின் இந்த நிலை பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேட்ரிமோனி தளங்கள், அரசியல்வாதிகளும் கை கொடுக்காத நிலையில் திருமண வரன் வேண்டி கடவுளிடம் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர் இளைஞர்கள். சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹணூரில் உள்ள புகழ்பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு திருமண வரன் வேண்டி பாதயாத்திரை செல்வதாக முடிவெடுத்த இளைஞர்கள் பலர் பாதயாத்திரை புறப்பட்டுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து இந்த பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.