கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கிய ஆட்டோ டிரைவர் ஒருவர் தனக்கு அதில் பரிசு விழுந்தது தெரியாமல் கிழித்து போட்ட சம்பவம் வைரலாகி உள்ளது.
கேரளாவின் காசர்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருபவர் மன்சூர் அலி. இவர் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இதுவரி ஒருமுறை கூட அதில் பரிசு அவருக்கு விழவில்லை. இந்நிலையில் சில நாட்கள் முன்னதாக வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் கடையில் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். ரூ.60 லட்சத்திற்கான அந்த லாட்டரியின் பரிசு விவரங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதை மேலோட்டமாக பார்த்த மன்சூர் தனக்கு பரிசு விழவில்லை என விரக்தியில் லாட்டரி சீட்டை கிழித்து போட்டுள்ளார்.
அவர் வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் அந்த கடையின் ஏஜெண்ட் அவருடைய எண்ணுக்கு ரூ.5 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார். உடனே பதறி ஆட்டோ நிறுத்தத்திற்கு ஓடிய மன்சூர் கிழித்து போட்ட லாட்டரி சீட்டு துண்டுகளை சேர்த்து கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் கிழிந்த லாட்டரி சீட்டுகள் பரிசுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்று லாட்டரி நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் கவுண்டமணி பரிசு விழுந்த தனது லாட்டரி சீட்டை சவரப்பெட்டியோடு ஆற்றில் வீசிவிட்டு அழுவது போல கேரள ஆட்டோ டிரைவரின் நிலை ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் பேசி வருகின்றனர்.