சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக பிரச்சாரக் கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த 2006 ஆம் பெண்களை சபரிமலைக் கோயிலின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் கோயிலின் உள்ளே செல்லலாம் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இதனையடுத்து பொதுமக்களிடமிருந்து பலத்த ஆதரவும் வரவேற்பும் வந்து கொண்டிருக்கிறது. அது போலவே சில இந்து மற்றும் வலதுசாரி அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பின் மேல் சமரிமலை தேவஸ்தானமே மேல்முறையீடு செய்யாத நிலையில் தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
பல இந்து அமைப்புகளோடு சேர்ந்து பாஜக தீர்ப்புக்கு எதிராக தற்போது பல போராட்டங்களை நடத்தி வருகிறது. பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 5 நாள் பேரணி ஒன்றை நடத்தி வருகிறது. இத்தகைய போராட்டங்களை முறியடிக்க மக்களிடம் எதிர் பிரச்சாரம் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் விஜயராகன் கூறியதாவது ‘ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே பாஜகவும் இந்து அமைப்புகளும் இத்தகைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸும் மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. அவர்களின் இந்த போராட்டத்திற்கு எதிராக மக்களிடம் உண்மையை எடுத்துரைக்க அக்ட்டோபர் 16-ந்தேதி முதல் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். அதில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்வார். 23 மற்று 24 ஆகிய தேதிகளில் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். மேலும் தொகுதி வாரியாக குடும்ப சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்போம்’ எனக் கூரியுள்ளார்.