டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நீர் நிலைகளை பொதுமக்களின் உதவியோடு பாதுகாக்கும் குடிமராமத்து திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டதின் கீழ் ரூ.500 கோடி செலவில் தமிழகம் முழுவதும் தூர்வாரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி, கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம், ஆந்திராவில் ராயலசீமாவில் உள்ள வறண்ட பகுதிகளும் நீர்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் பெறும் என்றும், அடிக்கடி வறட்சியை சந்திக்கும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ஆண்டுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் கலந்துகொண்டு, மாநிலங்களின் வளர்ச்சித் திட்டத்தை குறித்து மத்திய அரசிடம் பல கோரிக்கைகளை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.