சரத்பவாரின் முதுகில் குத்திய ரத்தக்கறை அமித்ஷாவின் கைகளில் இருந்து அகலாது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு.
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியெற்றுள்ள நிலையில், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித்பவார் பதவியேற்றுள்ளார். இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புதிய அரசு மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனில் கவனம் செலுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்த்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மஹாராஷ்டிராவில் பாஜக தனது கோரமுகத்தை அரங்கேற்றியுள்ளது. சரத்பவாரின் முதுகில் குத்திய ரத்தக்கறை அமித்ஷாவின் கைகளில் இருந்து அகலாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.