காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப் படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதாக, கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் குமாரசாமி பரபரப்பு பேட்டி.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சனையில், தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் பல மோதல்கள் நடந்தன. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் கூறியிருந்தது.
ஆனால் அப்போதும் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ஒரு விவசாயி தண்ணீர் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன், தனது இறுதி சடங்கில் முதல்வர் குமாரசாமி கலந்துகொள்ள வேண்டும் என ஒரு காணொலியின் மூலம் தனது விருப்பத்தை பகிர்ந்திருந்தார்.
அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது பற்றிய தகவலை அறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, அந்த விவசாயி-ன் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, நமது நீரை நாம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் என்றும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் நாம் ஆட்சி நடத்துவதால் காவிரி ஆணையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு நாம் கட்டுப்பட்டு உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் காவிரி நீர் விவகாரத்தில் யார் எவ்வளவு தண்ணீர் பயனபடுத்த வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்கிறது எனவும், அதன் படி நாம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
கர்நாடகா முதல்வரின் இந்த பேட்டி, அம்மாநில மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.