மத்திய பிரதேசத்தில் அதிவேகமாக பேருந்து ஓட்டிய ஓட்டுனர்களை பொதுமக்கள் நூதனமான முறையில் தண்டித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பேருந்து ஓட்டுனர்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அதிவேகமாக பேருந்துகளை இயக்குவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். ஓட்டுனர்கள் மக்கள் செல்வதை கவனிப்பதில்லை என்றும், கண்மூடிதனமாக பேருந்துகளை இயக்குவதாகவும் ராவ் நகர மக்கள் நகராட்சி தலைவர் சிவ்நாராயண டிங்குவிடம் அளித்த புகாரையடுத்து அவர் ஒரு நூதனமான தண்டனையை முன்மொழிந்துள்ளார்.
அதன்படி செயல்பட்ட பொதுமக்கள் அதிவேகமாக பேருந்து இயக்கும் ஓட்டுனர்களை பிடித்து பேருந்தின் உச்சியில் நிற்க வைத்து தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார்கள். ஓட்டுனர்களை பொதுமக்களே தண்டித்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.