திண்டுக்கல் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பிரியாணி கொடுத்து வாக்கு சேகரித்ததாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றன. இதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அவகாசம் முடிந்ததையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று தொடங்கியது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். திண்டுக்கலில் பெண் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு பிரியாணியும், பணமும் கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் பணப்பட்டுவாடா நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.