சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. இதில் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி இந்தபடம் வெளியாவதாக இருந்தது.
ஆனால், படத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளால் திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட முடியாது என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் அறிவித்தன.
இவ்வாறு இருக்கையில், பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருவோம் என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் மம்தா பானர்ஜி. அப்போது, பத்மாவதி படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரால் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் திரையிட முடியவில்லை என்றால் மேற்கு வங்காளத்தில் திரையிட தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என தெரிவித்தார்.
இதற்கு முன்னர், பத்மாவதிக்கு எதிரான போராட்டங்கள் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் சதி. இது ஒரு அவசரநிலை ஒடுக்குமுறை என்று தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.