“ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலில் இந்திய நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது தலைவரின் குடும்பத்தினர் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனப்படும் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இடம், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாக, ஜம்முவில் போலீசாரை கொன்ற பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற சியால்கோட்டின் சர்ஜல் முகாமும் முழுமையாக நாசமடைந்தது.
இந்த தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரும் பலியாகினர். அவரது சகோதரி, சகோதரியின் கணவர், மருமகன், அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பின் 4 முக்கிய உறுப்பினர்களும் உயிரிழந்தனர். ஆனால் மசூத் அசார் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
2001 நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2008 மும்பை தாக்குதல் போன்ற முக்கிய பயங்கரவாத செயல்களில் மசூத் அசார் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.