குஜராத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
குஜராத் தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் சமீபத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்து இன்று காலை இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 93 தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 851 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் 2.20 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இரண்டாவது மற்றும் இறுதிகட்ட தேர்தலில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளதால் அரசியல் களம் பரபரப்புடன் உள்ளது.
இன்று பிரதமர் மோடி , பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் வாக்களிக்க இருந்ததால் விஐபிக்கள் வாக்களிக்கவுள்ள வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்களிப்பதற்காக குஜராத் வந்த பிரதர் மோடி, சமர்பதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இன்று காலை 8 மணியளவில், மோடியின் தாயார் ஹீரா பெண், காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.