நாட்டின் எதிர்காலத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எங்கோ மாணவர்கள் ஆட்சேர்ப்புக்காக ஏங்குகிறார்கள், எங்கோ மாணவர்கள் வினாத்தாள் கசிவால் விரக்தியடைகிறார்கள், எங்கோ மாணவர்கள் நியமனத்திற்காக நீதிமன்றங்களைச் சுற்றி வருகிறார்கள், சில இடங்களில் தங்கள் குரலை உயர்த்தியதற்காக தடியடி நடத்துகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை ஆட்சேர்ப்பில் இருந்து ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு வரை சிறிய அளவிலான தேர்வுகளை கூட பாஜக அரசால் நியாயமாக நடத்த முடியவில்லை என்றும் இது இளைஞர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேலை உருவாக்கும் நிறுவனங்களை தங்கள் நண்பர்களுக்கு விற்று இளைஞர்களை ஒப்பந்தத்தில் அமர்த்துவது மோடியின் கொள்கை என்று அவர் விமர்சித்துள்ளார்.
மோடி அரசு மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுகளை மறைத்து, நம்பிக்கை ஒளியை அவர்களிடமிருந்து பறித்துள்ளது என்றும் இந்த குற்றத்தை வரலாறு ஒரு போதும் நரேந்திர மோடியை மன்னிக்காது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.