மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் ரிட் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முந்தைய பாஜக ஆட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் ஆளுநருக்கு மனு கொடுத்தனர். இதற்கு ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில், ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் சித்தராமையா கடந்த மாதம் 19-ந் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது விரிவான விசாரணை நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
மூடா முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு தடை கோரிய சித்தராமையாவின் ரிட் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.