புதுச்சேரியில் மாயமான சிறுமி வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன், இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை போலீசார் தேடி வந்தனர். சிறுமி கடந்து சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் 72 மணி நேரத்திற்கு பிறகு அம்பேத்கார் நகர் வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலை கைபற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் சந்தேகப்படியாக நின்றிருந்த ஒரு முதியவர் மற்றும் மூன்று வாலிபர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமியை படுகொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக மக்கள் குடியிருக்கும் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.