2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க நவம்பர் 30, அதாவது இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கஜா புயல் காரணமாக டெல்டா பகுதியில் உள்ள மாணவர்கள் மின்சாரம் இல்லாத காரணத்தால் ஆன்லைனில் பதிவிட முடியவில்லை .எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்க வேண்டும் என தமிழக அரசு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து பதிவிடும் காலம் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிடும் காலத்தை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தத நிலையில் டிசம்பர் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவிடலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதேபோல் நீட் தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த, டிசம்பர் 8 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் இந்த அறிவிப்பு டெல்டா பகுதி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஒருவார கால அவகாசம் உண்மையில் மாணவர்களுக்கு பயனளிக்கும் என கருதப்படுகிறது.