கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என பலர் இணையத்தில் பரவலாக ”நோ மீட் நோ கொரோனா வைரஸ்” என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சீனாவின் வுகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 300க்கும் மேற்பட்ட மக்களை பலி கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளதால் மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸானது பாம்பின் மூலமாக பரவியதாக கூறப்படுகிறது. சீனாவின் வுகான் நகரில் உள்ள விலங்குகள் சந்தை வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இறைச்சி உண்ணாமல் இருந்தால் கொரோனா வைரஸ் வராமல் தடுக்கலாம் என இணையத்தில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது.
இறைச்சி உண்பதால் கொரோனா வருவதாக அதிகாரப்பூர்வமாக எந்த நிரூபணங்களும் இல்லாத நிலையில் மக்கள் பலர் இறைச்சியை விடுத்து காய்கறிகளை மட்டும் உண்ண தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் “கறி வேண்டாம் காய்கறி போதும்” என்பது போன்ற வாசகங்களுடன் பலர் பதிவுகளை இட்டு வரும் நிலையில் கறி சாப்பிட்டாதானே கொரோனா வரும்! இனிமேல் காய்கறிதான்! – ட்ரெண்டாகும் #NoMeat_NoCoronaVirus என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.