ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உயர்மட்ட குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார்.
மக்களவை, மாநிலப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக, அரசமைப்புச் சட்டத்தின் தற்போதைய கட்டமைப்பை கருத்தில் கொண்டு, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம், இதர சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்ய வேண்டிய திருத்தங்களை இந்த குழு ஆய்வு செய்தது.
மேலும் மாநிலப் பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியமா? என்பது குறித்தும், தொங்கு பேரவை, நம்பிகையில்லாத் தீர்மானம் நிறைவேற்றம் போன்ற தருணங்களுக்கான தீர்வுகளை ஆய்வு செய்தது. ஒரே நேர தேர்தல்களுக்கான பொதுவான வாக்காளர் பட்டியல் பயன்பாடு குறித்து வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.
இந்நிலையில் 191 நாட்கள் தயாரித்த 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவினர் நேரில் வழங்கினர். இந்த சந்திப்பின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் இருந்தார்.