இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறும் நிலையில் அதில் எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ஆளும் பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று டெல்லியில் சர்தபவார் தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 17 எதிர்கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்த பாஜக பிரமுகரான யஷ்வந்த சின்ஹா கடந்த 2018ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது பாஜகவுக்கு எதிராக யஷ்வந்த சின்ஹா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.