பிரபல ஆன்லை ஹோட்டல் புக்கிங் நிறுவனமான ஓயோ, தங்களது இணைப்பில் உள்ள ஹோட்டல்களை ஏமாற்றியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் உணவு வாங்க எப்படி ஸ்விகி, ஸொமாட்டோ பொன்றவை பிரபலமான அப்ளிகேசன்களோ, அதுபோல தங்கும் விடுதிகளில் ஆன்லைனில் புக் செய்ய பிரபலமான அப்ளிகேசன் ஓயோ. இந்தியா முழுவதும் 2000க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள் ஓயோவுடன் இணைப்பில் உள்ளன.
இந்நிலையில் ஓயோ நிறுவனம் ஹோட்டல்களுக்கு உரிய கட்டணத்தை வழங்காமல் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ராஜ்குரு ஷெல்டர் ஹோட்டல்ஸ் உரிமையாளர் ஓயோ மீது காவல்த்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில் ஓயோ நிறுவனம் கடந்த ஒரு வருடமாக தங்களை ஏமாற்றி வருவதாகவும், ஆன்லைனில் ரூம் புக் செய்வதால் கிடைக்கும் பணத்தில் வெறும் 20% மட்டுமே ஹோட்டலுக்கு அளித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது ஹோட்டல் தொழிலில் 1 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து ஓயோ நிறுவன தலைவர் ரித்திஷ் அகர்வால் மற்றும் அவரது தொழில் பங்குதாரர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற அப்ளிகேசன்களால் தாங்கள் நஷ்டமடைவதாக உணவகங்கள் வெளியேறியிருக்கும் நிலையில், தற்போது ஹோட்டல், தங்கும் விடுதிகள் புக் செய்யும் ஓயோ நிறுவனமும் இது போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.