ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அவர் ஜாமீனில் வெளிவருவாரா? சிறை செல்வாரா? அல்லது சிபிஐ காவலில் நீடிக்கப்படுவாரா? என இன்று தெரிய வரும் இன்று ப.சிதம்பரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவரை ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதனையடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்த சிபிஐ அவரிடம் தீவிர விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைவதால் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். சிபிஐ காவல் மேலும் நீட்டிக்கப்படாவிட்டால் இன்று ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருக்கத் தயார் என ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது இதனை தெரிவித்தார். ஆனால் இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இதனைக் கூறினால் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்றும் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் இன்று சிறை செல்வாரா அல்லது மீண்டும் சிபிஐ காவலில் இருப்பாரா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்