பொருளாதார நிலை மிகவும் தவறான நிலையில் இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் 6 கட்டங்கள் முடிந்துள்ளது. இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு வரும் மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து நடந்து முடிந்துள்ள வாக்குப்பதிவு குறித்தும் அடுத்த ஆட்சி குறித்தும் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ப சிதம்பரம் ’ ஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளையும் காங்கிரஸ் முழுமையாகக் கைப்பற்றும். தேர்தலுக்கு முன் நாங்கள் அமைத்தக் கூட்டணி வலுவாக உள்ளது. அதுபோல தேர்தலுக்குப் பின்னரும் எங்களுடன் கூட்டணி சேர சிலர் தயாராக உள்ளனர். தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான வடிவில் உள்ளது. அதனால் அடுத்து வரும் நிதியமைச்சருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்பத்திக் குறியீடுகள், முதலீடுகள் உள்ளிட்ட அனைத்தும் எதிர்திசையில் சென்றுகொண்டிருக்கின்றன.’ எனத் தெரிவித்தார்.