பெட்ரோல் விற்பனை டீலர்கள் சங்கத்திற்கும், மத்திய அரசிற்கும் இடையே எற்பட்ட பேச்சு வார்த்தை காரணமாக, பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் முறை வருகிற 13ம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு, ரிசர்வ் வங்கி இதுவரை 0.25 சதவீதம் சேவை வரியாக பிடித்து வந்தது. பழைய நோட்டுகள் செல்லாது மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஆகிய அறிவிப்பு காரணமாக டிசம்பர் 30ம் தேதி வரை சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்தது.
மேலும், ஜனவர் 1ம் தேதிக்கு பின், பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தப்படும் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு 1 சதவீத வரியை இந்திய ரிசர்வ் வங்கி விதித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற ஊக்குவித்து வரும் நிலையில் நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை எதிர்த்து அறிவிப்பு வெளியிட்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய அரசிற்கும், இந்திய பெட்ரோல் டீலர் சங்கத்திற்கும் இடையே நேற்று ஏற்பட்ட பேச்சு வார்த்தை காரணமாக, வருகிற 13ம் தேதி வரை எந்த சேவை வரியும் விதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்தது. இதையடுத்து, அந்த தேதி வரை கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என பெட்ரோல் டீலர் சங்கம் அறிவித்துள்ளது.