பாகிஸ்தானுக்குள் விழுந்த பிரமோஸ் ஏவுகணை குறித்து விளக்கம் அளிக்குமாறு பிலிப்பைன்ஸ் வலியுறுத்தி உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் அவ்வபோது எல்லையில் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைவது தொடர்பான பிரச்சினைகளும் எழுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்து தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுது.
இந்தியா இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கோரியிருந்தது. இதனைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு விளக்கம் அளித்தது. அதில், பாகிஸ்தானில் ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது என விளக்கம் அளித்தது.
இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணை சோதனையின் போது, கோளாறு ஏற்பட்டு பாகிஸ்தானுக்குள் விழுந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு அதனை இந்தியாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிலிப்பைன்ஸ் வலியுறுத்தி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் பிரமோஸ் வகை ஏவுகணைகளை வாங்க இந்திய அரசும் பிலிப்பைன்ஸ் அரசும் ஒப்பந்தம் மேற்கொண்டன என்பது கூடுதல் தகவல்.