கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து வந்த ஒரு பக்தர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த 65 வயது பக்தரான சுரேந்திர ஷா என்பவர் நேற்று மாலை பத்மநாப சுவாமி கோவிலுக்கு தனது மனைவி, சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வந்துள்ளார். அப்போது, அவரது கண்ணாடியில் வழக்கத்திற்கு மாறான பளபளப்பை பார்த்த பாதுகாப்பு ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த கண்ணாடியை சோதனை செய்தபோது, அதில் ரகசியமாக வைக்கப்பட்ட கேமராக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோயில் விதிகளை மீறிய செயல் என்பதால், சுரேந்திர ஷா கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் கூப்பிடும் நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்த பின்னர், அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பகட்ட விசாரணையில், அவர் எந்தவிதமான தீய நோக்கத்துடனும் இருந்ததாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.