உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. வழக்குகள் விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தில், காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில், கடவுள் இராமரைப் பற்றிய அவமதிப்பான கருத்துகளை வெளியிட்டதாக கூறி, அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்குரைஞர் ஹரிசங்கர் பாண்டே தாக்கல் செய்துள்ளார்.
அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி உரையாற்றிய ராகுல் காந்தி, “ராமர் சம்பந்தப்பட்ட கதைகள் புராண கற்பனைகள்” என்று தெரிவித்ததாகவும், இது சனாதன மதத்தை நம்புவோரின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாலும், இது வெறுப்புப் பேச்சு எனக் கருதப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உரையால் மத உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன எனும் காரணத்தால், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மே 19-ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதற்கான நோட்டீஸ்கள் ராகுல் காந்திக்கும், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்க்கும் அனுப்பப்படும் என நீதிபதி நீரஜ் குமார் திரிபாதி தெரிவித்தார்.