இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று மூன்றாவது முறையாக பதவி ஏற்ற நிலையில் முதல் வெளிநாட்டு பயணமாக அவர் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆட்சி அமைத்தது. நேற்று பிரதமராக மோடியும் அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டார்கள் என்பதும் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் மற்றும் எல் முருகன் ஆகியோர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் ஜூன் 18ஆம் தேதி இத்தாலியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி 7 உச்சி மாநாடு இத்தாலியில் உள்ள ஃபசானோ நகரில் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஜூன் 14ஆம் தேதி பிரதமர் மோடி இத்தாலி செல்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் மோடி பயணம் செய்யும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.