3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து செயல்பட்டது. மோடியின் கடந்த ஆட்சிகாலத்தில் பல்வேறு முக்கியத்திட்டங்களுக்கு அதிமுக தனது ஆதரவை அளித்து வந்த சூழலில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையின் செயல்பாடுகளால், இந்த கூட்டணி உடைந்தது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக தனித்தனியாக அணி அமைத்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக அணிகள் இரண்டுமே ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அதிமுக பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் என்று எஸ்.பி வேலுமணி கூறியிருந்தார். இது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் அதிமுக கருத்து இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். இது சம்பந்தமாக அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடி அவர்களுக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைக்கலாம் என்றும் அதனாலேயே மோடிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.