நாட்டு மக்களோடு பிரதமர் வானொலி வழி உரையாடும் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பாரதியார் பாடலை உதாரணம் கூறியது பலரை வியக்க வைத்துள்ளது.
மாதம்தோறும் நாட்டு மக்களோடு பிரதமர் மோடி பேசி வரும் “மனதின் குரல் (மன் கீ பாத்)’ நிகழ்ச்சி வானொலியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு மாத இறுதியிலும் பேசும் பிரதமர் மோடி அந்த மாதத்தில் தேசிய அளவில் நடந்த சம்பவங்கள் மாற்றங்கள் குறித்த தனது கருத்துகளை கூறி வருகிறார்.
இந்த மாதத்திற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அயோத்தி வழக்கில் மக்கள் அமைதி காத்தது குறித்து குறிப்பிட்டு பேசியுள்ளார். அதில் அவர் , உச்சநீதிமன்ற தீர்ப்பின் மைல் கல்லாக கருதப்படும் அயோத்தி வழக்கில் மக்கள் காட்டிய முதிர்ச்சியும், பொறுமையும் மக்கள் நீதித்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுவதாக கூறியுள்ளார்.
மேலும் மக்களின் பொறுமைக்கு பாரதியார் எழுதிய ”முப்பது கோடி முகமுடையாள்” என்ற பாடலை உதாரணமாக கூறினார். அன்று 30 கோடி மக்கள் வாழ்ந்த இந்தியா குறித்து பாடிய பாரதியார் முப்பது கோடி முகங்கள் இருந்தாலும் எண்ணங்கள் ஒன்றுதான் என்று அர்த்தம் தரும்படி அந்த பாடலை பாடியிருந்தார். இன்று 130 கோடி மக்களுக்கும் அந்த பாடல் பொருந்தி போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.