வங்கி கணக்கு குறித்த விபரங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் தெரிவிக்க வேண்டாம் என வங்கி தரப்பில் இருந்து அதிக அளவு விழிப்புணர்வு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் ஒருவரின் மனைவியையே மர்ம நபர் ஒருவர் ஏமாற்றி ரூ 23 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அவர்களின் மனைவி பிரனீத் கவுர் அவர்களை மோசடி நபர் ஒருவர் ரூ.23 லட்சம் மோசடி செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அவர்களின் மனைவி சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பட்டியாலா என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவரிடம் சமீபத்தில் ஒரு மர்ம நபர் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை வங்கி மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, எம்பிக்கான முதல் சம்பள கணக்கை வங்கியில் செலுத்துவதற்கு, வங்கியின் ஏடிஎம் கார்டு எண் மற்றும் வங்கி விபரங்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்
வங்கி மேலாளரே போன் செய்துள்ளதாக நம்பிய பிரனீத் கவுர் தன்னுடைய வங்கி கணக்கின் முழுவிவரத்தையும் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஒரு சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.23 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரனீத் கவுர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார்
முதலமைச்சரின் மனைவியிடமே மோசடி செய்துள்ளதாக புகார் வந்ததை அடுத்து அதிரடியாக செயல்பட்ட காவல்துறையினர் ஒரு சில மணி நேரத்தில் மோசடி நபரை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது